Deborah / தெபொராள்

தெபொராளாகிய நான் எழும்புமளவும், இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்புமளவும், கிராமங்கள் பாழாய்ப்போயின, இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய்ப்போயின. (நியாயாதிபதிகள் 5:7)
இன்று நாம் வேதாகம பெண்ணாகிய தெபொராளைப்பற்றி தியானிப்போம். தெபொராள் என்ற பெயருக்கு தேனீ என்று பொருள்.
இந்தத் தெபொராளும் தேனீயைப் போல மிகவும் சுறுசுறுப்பாக செயல்ப்பட்டாள். அவள் தன் கணவனாகிய லபிதோத்துடன் ராமாவுக்கும் பெத்தலகேமுக்கும் இடையிலுள்ள, எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள ஒரு பேரிச்சம்பழம் மரத்தினடியில் வசித்து வந்தார்கள்!
குடும்பத் தலைவியாகிய தெபொராள் தன் பொறுப்புக்களையும், வீட்டின் கடமைகளையும் முடித்துவிட்டு, அனுதினமும் பேரிச்சம்பழ மரத்தடியில் வந்து அமர்ந்து விடுவாள்.
அங்கு, அடுத்தடுத்து மக்கள் கொண்டு வரும் பிரச்சனைகளுக்கு, கர்த்தரின் உதவியோடு நியாயம் விசாரித்து, தீர்ப்பு வழங்குவாள்!
இஸ்ரவேலின் 16 நியாயாதிபதிகளில் இவள் மட்டுமே பெண்! வேதாகமத்தில் உள்ள 7 பெண் தீர்க்கதரிசிகளில் இவளும் ஒருத்தி.
இந்த தெபொராளின் காலத்தில், யாபீன் என்ற கானானிய ராஜா 20 வருடங்களாக தேவ ஜனங்களை துன்புறுத்தினான். இதினிமித்தம் தேவ ஜனங்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டனர். தேவன் தேவ ஜனங்கள் ஜெபத்தை கேட்டு தேவன் பாரக்கை எழுப்பினார்.
ஆனால், பாராக் யுத்தத்திற்கு பயந்து தெபொராள் உடன் வந்தால் தான் யுத்தத்திற்கு செல்வேன் என்றான். தெபொராளும் எந்த ஒரு தயக்கமின்றி யுத்தத்திற்கு சென்றாள். கர்த்தர் யுத்தத்தில் ஜெயமும் தந்தார்!
தேவ ஜனம் யுத்தத்தில் ஜெயம்பெற்றதால் தேவ ஐனத்துடன் இணைந்து தெபொராளும் கர்த்தரைப் பாடித் துதித்தாள். அவளுக்கோ கர்த்தரைப் பாடி துதிப்பது என்பது மிகவும் பிரியம்.
மேலும், அவள் இஸ்ரவேலில் நியாயாதிபதியாயிருந்த 40 வருஷங்களும் தேசம் அமைதலாய் இருந்தது. அவள் மக்களின் நலன் கருதி, சமுதாயத்திற்குப் பல நன்மைகள் செய்ய கர்த்தர் அவள் கையை பலப்படுத்தினார்.
கொடூரமான ஆட்சியாளனாகிய, யாபீனுக்கு பயந்து ஜனங்கள் கிராமத்தை விட்டு ஓடிப் போனார்கள். அவர்களைத் திரும்ப அழைத்து வந்து தேசத்தில் குடியேற்றினாள்.
தேவ கிருபையால் இப்படி பல நன்மைகளை தேசத்திற்காக தெபொராள் செய்தாள். இப்படிப் பல நன்மைகளை தெபொராள் செய்ததால், ஜனங்கள் அவளைத் தாய் என்று அழைத்தார்கள்.
இதை வாசிக்கும் அன்பு சகோதரிகளே, நீங்களும் தேவனுக்காய் செயல்படும்படி எழும்புகள். சாதகமான சூழ்நிலைகள் இல்லை என்கிறீர்களா? தெபொராளின் வாழ்க்கையிலும் சாதகமற்ற சூழ்நிலைகள் இருக்கதான் செய்தன.
குடும்பத்தின் பொறுப்புகளும், அலுவல்களும் அவளுக்கும் இருக்கத்தான் செய்தன. அவைகளை திட்டமிட்டு செய்து, தேவனுக்காகவும் எழும்ப வைராக்கியம் கொண்டாள். தேவனுக்காக எழும்பும் யாவரும், சாதிக்காமல் ஒடுங்குவதில்லை. பெலவீன பாண்டங்களாகிய பெண்களையும், தேவன் தன் சித்தப்படி பயன்படுத்துவார் என்பது நிச்சயம்.
ஆம், உங்களை கொண்டு சுற்றியுள்ள கிராமங்களுக்கும் பட்டணங்களுக்கும் இரட்சிப்பை கட்டளையிட ஆயத்தமாய் இருக்கிறார். எழும்புவீர்களா? இஸ்ரவேலுக்கு தாயாக விளங்கினாள் தெபொராள்.
நான் நீங்கள் இந்திய தேசத்திற்கு தாயாக மாற வேண்டும் என்று உங்களை வாழ்த்துகிறேன். தேவன் தாமே அவ்விதமாக உங்களை வழி நடத்துவாராக. ஆமென்.
எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; (ஏசாயா 52:1)

Add Comment

Skip to toolbar